Monday, June 29, 2009

விஜய் அரசியல் சக்தியாக உருவாக முடியுமா ?


அரிதாரம் பூசியவுடன் அடுத்தது நாற்காலி எப்போ கிடைக்கும் என்பதை எம்.ஜியாரும், கலைஞரும், ஜெயலலிதாவும் கட்டமைத்து தொலைத்துவிட்டார்கள்.

சிவாஜி, ராமராஜன், பாக்கியராஜ், சரத் குமார், கார்த்திக், டீ.ஆர் போன்றவர்கள் காமெடி பீசுகள் ஆகிவிட்டாலும், நேற்றுவந்த எஸ்.வி.சேகரும், ராதாரவியும் நெப்போலியனும், ஏன் ஜே.கே ரித்திஷும்கூட எம்.பி, எம்.எல்.ஏ என்று ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டு பிழைப்பை ஓட்டியதை பார்க்கத்தானே செய்கிறோம்...

தமிழக வாக்குகளில் பத்து சதவீதத்தை சாலிட் ஆக பிடித்துவிட்ட விஜயகாந்த், அதனை எத்தனை தேர்தல்களுக்கு வைத்திருக்கமுடியும், அதை அதிகரிக்க முடியுமா, குறையுமா, இதனால் யார் யாருக்கு எவ்வளவு பாதிப்பு...என்று இதில் பேச பல விஷயம் உண்டு...

உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணகளமான பல கதைகளையும், க்ரீம் பிஸ்கெட் இல்லை என்றாலும் மேரி பிஸ்கேட் கிடைத்த கதைபோல, ப்ரியானி இல்லை என்றாலும் குஸ்கா கிடைத்ததே என்பது கிடைத்தவரை லாபம் ஸ்டோரி போல...பலப்பல கதைகள் இங்கே...

மேட்டர் அது அல்ல..

நாளைய தீர்ப்பு படத்தில் உன்னை நாயகனாக்கினேன். நாளைக்கு உன்னை முதல்வராக்குறேன் என்று கிளம்பிவிட்ட எஸ்.ஏ.சி, இன்னும் ஐம்பது படம் கூட முடிக்காத இளைய தளபதி விஜயை வைத்து தனது அரசியல் அரிப்பை தீர்த்துக்கொள்ள பார்க்கிறாரா ?

அல்லது விஜயின் ரசிகர்களை ஒரு அரசியல் சக்தியாக கட்டமைத்து, மற்ற கட்சிகளுடன் பேரம் செய்ய ஆசையா அவருக்கு ?

இல்லை இளைய தளபதி விஜய்க்கு உண்மையிலேயே சமூக அக்கறையும், அவரை வாழவைத்த ரசிகப்பெருமக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று ஆசை உண்டா ?

அவரது ரசிகர்களுக்கு மட்டும் எதாவது செய்யவேண்டுமா அல்லது மக்களுக்குமா ? இவ்வளவு நாள் அவர் செய்தது என்ன ?

விஜய் ரசிகர்களின் பலம் என்ன ? ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை ரசிகர்கள் உண்டு, விஜய் ரசிகர்களுக்கு மக்களுடன் தொடர்பு உண்டா ?

அப்படி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதன் உண்மையான பயனாளிகள் யார் யார் ?

என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன...

இப்போது யாரையும் அலட்சியப்படுத்த முடியாதுங்க..கொங்கு நாடு முன்னேற்றக்கழகமும் பெஸ்ட் ராமசாமியும் இன்னொரு ராமதாஸ் ஆக ஒரே தேர்தலில் உருவெடுப்பார்கள் என்று யாருக்கு தெரியும் ?

இன்றைக்கு 25 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் உருவெடுக்கவில்லையா ?

அதே போல விஜய், விஜயின் அரசியல் அபிலாஷை, அவரது ரசிகர்களின் பலம், பலவீனம் போன்றவற்றை அலசலாம் வாருங்கள்...

இளைய தளபதி விஜய் என்ன மாற்றத்தை தரமுடியும் ? இது தான் எனது கேள்வி...பதில் ப்ளீஸ்....!!!

Friday, May 15, 2009

ஆனந்த விகடன் இதழுக்கு கொளத்தூர் மணி அளித்துள்ள பேட்டி

ஆனந்த விகடன் இதழுக்கு கொளத்தூர் மணி அளித்துள்ள பேட்டி..



தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம் என்று முன்பு வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைது செய்யப்பட்டபோதே உச்சநீதிமன்றம் தெளிவாகத் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் வெறும் பேச்சுக்காகக் கைது செய்யப்படுகிறோம்.

வைகோவின் பொடா வழக்கு விடுதலைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த, செயலாற்றிய அதே கலைஞர்தான் இப்போது மூன்று பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார். ஒரே சட்டத்தை ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக மாறினால் வேறு மாதிரியும் கையாள்கிறார் கலைஞர்!



நாங்கள் தேர்தலில் பங்கேற்பது இல்லை. ஆனால், அரசியலைப் புறந்தள்ள முடியாது. நீங்கள் சொல்வது மாதிரி அது காங்கிரசுக்கு எதிரான சிடி என்பதைவிட ஈழத் தமிழனுக்கு ஆதரவான சிடி. ஒரு திட்டமிட்ட இன அழித்தொழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்படுகிறது. சிங்கள இராணுவம் தமிழர்களை விதவிதமான குண்டுகளால் கொலை செய்கிறது. பட்டினி போடுகிறது.



கொட்டாங்குச்சிகளைக் கையில் ஏந்திய படி ஒரு கவளம் சோற்றுக்காகவும், ஒரு குவளைத் தண்ணீருக்காகவும் தமிழர்கள் கையேந்தி முண்டியடிக்கிறார்கள். இந்த உண்மைகளை எடுத்துச் சொல்வதில் என்ன பிழை? அதுவும் நாங்கள் தயாரித்திருந்த சிடி-யில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளைத்தான் தொகுத்திருந்தோம். அதையே கூடாது என்கிறார்கள்.

ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது எப்படி ஜனநாயக உரிமையோ, அதுபோல இன்ன கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், கலைஞர் அரசு இந்த ஜனநாயகத்தை அடியோடு மறுக்கிறது.

கோவைச் சம்பவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அது ஒட்டுமொத்த தமிழர் கொந்தளிப்பின் ஒரு துளி வெளிப்பாடு. உண்மையில், கோவையில் அன்று எங்கள் இயக்கத் தோழர்களின் எண்ணிக்கை 30 பேரோ, 40 பேரோதான்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு சாலையில் நின்றிருந்தவர்களும், பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும், கிராமத்து மக்களும் தோழர்களுடன் இணைந்துகொண்டனர். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்குக் கோபம் இருக்கிறது.

தேர்தல் அரசியல் வழியாக அமைகிற எந்த அரசும் உழைக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தராது என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். ஆனால், நடப்பில் தேர்தல் அரசியல் என்ற சீரழிந்த வடிவம் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. இதில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. ஒப்பீட்டு அளவில் குறைந்த கேடுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

இப்படி ஈழப் பிரச்னையில் கருணாநிதியை விடக் குறைந்த கேடுள்ளவராக ஜெயலலிதாவை நினைக்கிறோம். ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம். செயல் உத்தியை மட்டுமே மாற்றிக்கொண்டு இருக்கிறோம். போர் உத்தி அப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளார் மணி.

Thursday, May 14, 2009

சாதியை விட்டொழி!முன்னேறு! புதுவுலகு செய்!

தமிழ்நாட்டின் / இந்தியாவின் சமூகக் கட்டமைப்பானது உலகின் தொன்மையான நாகரீகம் நமது என்று பெருமைப்படும் அளவிற்கு சிறந்ததொன்றாக இல்லை. உலகின் எந்தவொரு சமூகத்திலும் , தீண்டத்தக்க மனிதர்கள் அல்லர் இவர்கள் என்று பாகுபடுத்தப்படவில்லை.

இவனிவன் துவைக்கவும் , இவனிவன் செரைக்கவும் மட்டுமே லாயக்கு அல்லது அதை மட்டுமே அவன் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. ஆகவே , இயற்கைக்கு ஒவ்வாத , ஆரோக்கியமான சமூகத்திற்கு ஒவ்வாத , நமது முன்னேற்றத்தைத் தடுக்கின்ற இத்தகைய சாதிக்கட்டமைப்பை உடைத்தெறிவது என்பது நமது சமூகத்தை அடுத்தநிலைக்கு கொண்டு செல்வதில் முதல் படி.

ஆனால் , அத்தகைய சாதிக் கட்டமைப்பை உடைத்தெறிவதற்காக தேர்ந்தெடுக்கும் வழிகள் என்ன? . இட ஒதுக்கீடுகளாலும் , பொருளாதார முன்னேற்றங்களாலும் சாதியை ஒழிக்க முடியுமா ?

இரட்டைக்குவளை முறையை ஒழிக்கச் சொல்லி சாலை மறியல் நடத்துவதாலும் , தீண்டாமைச் சுவரை உடைக்கச் சொல்லி கலவரம் நடத்துவதாலும் , அங்கங்கே தனித்தொகுதிகளை அறிவித்து அங்கே தாழ்த்தப்பட்டவர்களை நிறுத்தி ஒரு பொம்மை நிர்வாகத்தை நடத்துவதாலும் சாதியை ஒழிக்க முடியுமா?

ஒவ்வொரு கிராமத்திலும் ஒதுக்குப்புறமாக வாழும் தலித்கள் தத்தமது சேரிகளில் மச்சு வீடு கட்டிக்கொள்ளத்தான் முடியுமே ஒழிய , உயர்சாதி மக்களுடன் ஒன்றாக பக்கத்து வீட்டில் வாழ்வது முடியுமா? நகர மயமாக்கலின் மூலமாய் அருகருகே தலித்களும் , ஒதுக்கப்பட்டவர்களும் வாழ்வது என்னமோ தற்போது சாத்தியமே. ஆனால் , அது மனப்பூர்வ மாற்றமா ? இல்லையே , ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைக்கு தான் சார்ந்த சாதியில் தான் கல்யாணம் பண்ணி வைக்கப்பார்க்கிறான்.

மேற்கண்ட நிலைகளை அடைவது சாத்தியமா ?

பொம்மையளவுக்கு கூட தாழ்த்தப்பட்டவர்கள் தமது கிராமத்தின் தலைமைத்துவத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணும் ஆதிக்க சாதி மக்களையும் , பிறப்பிலேயே தாம் மற்றவர்களை விடக் கீழானவர்கள் என்று எண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே கோட்டில் கொண்டு வர இயலுமா ?

கண்டிப்பாக இயலும்.

ஒவ்வொரு மனிதனும் தன் மனதளவில் முதிர்ச்சியை அடைவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த இயலும்.

தொடர்ச்சியான கவுன்சிலிங் மூலம் மிகக்கண்டிப்பாக அவர்கள் மனதில் இருக்கும் ஆதிக்க மனப்பாங்கையும் , தாழ்வு மனப்பாங்கையும் அகற்ற இயலும்.

ஒரு தாலுக்காவிற்கு ஒரு கிராமத்தை மாற்ற முயன்றால் - கிராமத்தின் வீணே கிடைக்கும் இளைஞர் சக்தியை பயன்படுத்தினால் - ஆரோக்கியமான சமுதாயத்தை அமைப்பது வெறும் கனவுகளால் கட்டப்பட்ட கோட்டையாகவே கழியும் அவலம் நிற்காதா என்ன ?

முடியும். கண்டிப்பாக முடியும்.

ஆனால் இன்றைய அரசியல் களம் என்ன சொல்கிறது ? என்ன செய்கிறது. ?

சாதிக்கொறு கட்சியாக , ஊருக்கு ஒரு கட்சியாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றுமையைப் போதிக்க வேண்டிய அரசியல் தலைமைகள் சாதி பார்த்து தனது வேட்பாளர்களை நிறுத்தி சாதித்தீயை அணையாமல் பார்த்துக்கொள்கிறது.

வேலியே பயிரை மேய்வதை சகித்துக் கொள்ளலாமா ?

வேலியை நாம் மீண்டும் செம்மைப் படுத்த வேண்டாமா?

காமராஜரை நாடாராகவும் , விடுதலை வீரர்களை தத்தமது சாதிக்கு அடையாளம்
கொண்டு பார்க்கும் இந்த அரசியல் கட்சிகளா நாம் விரும்பும் அமைதியான , அழகான தமிழகத்தை உருவாக்க உதவப்போகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போமா ?


ஏதோ சில தலித் அமைப்புக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதால் தலித் மக்கள் சமூக அங்கீகாரம் பெற்று விட்டார்கள் என்று சொல்வது சாத்தியப் பட்டதல்ல. அத்தகைய பிரதிநிதித்துவங்களும் அதன் மூலமான ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்களும் மக்களிடையே கசப்புணர்வைத் தான் மேலும் மேலும் ஏற்படுத்த வல்லவை.

ஆக , தேவை மனமாற்றமே. சொல்லப்போனால் சாதியம் என்பது ஒருவித மனோவியாதியே. அம்மனோவியாதிக்கான மருந்து சாதியம் என்பது மனோவியாதி என்று அந்நோய் பீடித்திருப்பவர்களுக்கு சுட்டிக்காட்டுவதே.

ஆனால் , ஏனோ இப்பணியில் ஈடுபட வேண்டிய வெகுசன பத்திரிகைக்கள் அரசியல் கட்சிகளே வெளியிடாத சாதிய அடையாளத்துடன் ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதான ஒரு துர்பாக்கிய நிலையிலேயே இருக்கின்றன.


சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.


பாவேந்தர் பாரதிதாசனின் இந்த வரிகள் அறுபதாண்டு காலம் கழித்தும் பொறுந்துவது எவ்வளவு வேதனை?

என்னதான் செய்ய முடியும்?

முடியும்....!

தேவை , சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் புதைந்திருக்கும் புற்றுநோயான சாதீயத்தை அகற்றுவதற்கு வலிமையான , தொலைநோக்குடைய ஒரு தலைமை!!!!.

அத்தகைய மாபெரும் தலைமைக்கான பொறி , இளைஞர்களாகிய நம்மிடத்தில் தான் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அந்தப் பொறி உருவாகுமானால் , நாம் விரும்பும் சமூக மாற்றம் சாத்தியமே.

Tuesday, May 12, 2009

இந்தமுறை ஏன் ஜெயலலிதா வேண்டும் ? ஏன் கலைஞர் வேண்டாம் ?




கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்ற திராவிட முன்னேற்றக்கழகம் இந்த முறை நாற்பதிலும் தோற்கலாம் என்று செய்திகள் வருகின்றன...சில திமுக அனுதாபிகளே 30, 20, என்று பாபா க்கவுண்டிங் மாதிரி டவுன்க்ரேடு ஆகிக்கொண்டிருக்கிறார்கள்...

ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனா உங்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதுபோல, தி.மு.க பினிஷிங்கில் நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது...அதற்கு பல காரணங்கள்...ஜேகே ரித்திஷுக்கு சீட்டு கொடுத்தபோதே திமுகவில் உட்கட்சி பண நாயகம் எந்த அளவில் உள்ளது என்று தெரிந்துவிட்டது...இப்போது அந்த காரணங்களை ஆப்புகளாக உங்கள் முன் வைக்கிறேன்...

மின்வெட்டு , ஆப்பு நெ 1

ஆற்காட்டாரை திமுகவினரே திட்டிக்கொண்டிருக்கும் ஒரு கொடூர பிரச்சினை இது. தேர்தல் சமயத்தில் எப்படி எல்லா நேரமும் மின்சாரம் கொடுக்கமுடிகிறது, மீட்டிங்குகளுக்கு கம்பி போட்டது போக என்று பாமரர்களும் டெக்னிக்கலாக பேச ஆரம்பித்துவிட்ட இந்த நேரம், திமுகவுக்கு சிக்கல்தான்..

மின்வெட்டு பிரச்சினையால் எவ்வளவு தொழில்கள் பாதிக்கப்பட்டன, எவ்வளவு தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று பட்டியல் போட்டால் அனுமார் வால் மாதிரி நீண்டுவிடும். அதனால் கச்சிதமாக முடித்துவிடுகிறேன்.

ஊடக ஆக்டோபஸ், ஆப்பு நெ 2

அரசு கேபிள் என்றார்கள். அரசே கேபிள் கனெக்சன் கொடுக்கும் என்றார்கள். குடும்பம் பிரிந்திருந்தபோது அதிகாரிகள் விரைவாக பணியாற்றினார்கள். கண்கள் பனித்து, இதயம் இனித்தவுடன், பழைய குருடி, கதவை திறடி என்று மீண்டும் ஆரம்பித்துவிட்டது இந்த ஊடக ஆக்டோபஸ்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கேபிள், அதில் வேலை செய்யும் நாலைந்து இளைஞர்கள் என்று இதனால் பாதிக்கபட்டவர்களின் வீச்சு, அடி மட்டம் வரை...

இந்த தொழில் போட்டியில் மதுரையில் உயிரை விட்ட தினகரன் அலுவலக ஊழியர்களுடன், ரீசண்டாக வெட்டி கொல்லப்பட்டவர் கேபிள் டிவி சங்க தலைவர்.

முன்பெல்லாம் சன் நியூஸ் நடுநிலையான செய்தியாக பார்க்கப்பட்டு, இப்போது அதுவும் பல் இளிப்பது எல்லோருக்கும் தெரிகிறது.

தண்ணி பிரச்சினை, ஆப்பு நெ 3

தண்ணி பிரச்சினை என்றவுடன் உங்களுக்கு டாஸ்மாக் நியாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல...காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கிருஷ்னா, ஒக்கேனக்கல் என கலைஞர் பாராமுகமாக நடந்துகொள்வது, பெரிய ஏமாற்றம்..

கலைஞர் நினைத்திருந்தால், பெங்களூர் ஜெயநகரில் இருக்கும் மகள் செல்வி வீட்டில் இட்லி உப்புமா சாப்பிட்டுவிட்டு, சாயங்காலமாக போய் எடியூரப்பாவை பார்த்து இந்த ஒக்கேனக்கல் விசயத்தை ஊதி தள்ளியிருக்கலாம்..

திருவனந்தபுரத்தில் நேந்திரம் சிப்சையும், வாழைப்பழ பஜ்ஜியை சுவைத்துக்கொண்டே முல்லைப்பெரியாறு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம்.

ஒரு ஹைதராபாத் பிரியாணியை வெட்டிக்கொண்டே கிருஷ்ணா, பாலாற்று அணை பிரச்சினையை எல்லாம் சரிகட்டியிருந்திருக்கலாம்..

கலைஞரின் வயதும், அரசியல் அனுபவமும் அவர் அங்கே போயிருந்தாலே எழுந்து நின்று வேலையை முடித்து கொடுத்திருந்திருப்பார்கள். எதிர்ப்புகள் எல்லாம் நீர்த்து போயிருந்திருக்கும்..

ஆனால் செய்யவில்லையே...

எங்கே, குடும்ப சண்டைகளை தீர்ப்பதற்கே நேரம் சரியா இருக்கு...இதுல ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தையோ, பாலாற்றில் அணை கட்டப்படுவதையோ, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையையோ எப்படி பார்க்கமுடியும் ?

சேது சமுத்திர திட்டம் , ஆப்பு நெம்பர் 4

சேது சமுத்திர திட்டம் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தபோது மகிழ்ந்தேன், அட்லீஸ்ட் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் அதை எதிர்ப்புகளை சமாளித்து நிறைவேற்றியிருந்தால் அது வாக்குகளாக மாறியிருக்கும்...

ராமர் பாலம் அப்படீங்கறான், வழக்கு போடறான்..உங்கள் அரசாங்கம் தானே இருந்தது...எதிர்ப்புகளை தூள் தூளாக்கவேண்டிய பாலு, தன்னுடைய சொந்த வேலைகள் பாதி, மத்த வேலைகள் மீதி என்று இருந்தால் எப்படி ?

"ஆமா, என்னுடைய குடும்பத்தினருக்கு காண்ட்ராக்ட் கொடுத்தேன்" என்று நாடாளுமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் எப்படி ?

ஈழப்பிரச்சினை, கடைசி நேர நாடகம், ஆப்பு நெம்பர் 5

தகவல் தொழில்நுட்ப உலகம் அய்யா இது. 3000 பேர் கொல்லப்பட்ட தினத்தில் சன் டிவியிலோ, கலைஞர் டிவியிலோ, ஒரு மயிரையும் காணோம். மக்களுக்கு எதுவும் தெரியாமல் போய்விடுமா என்ன ?

ஈழப்பிரச்சினையில் கலைஞரின் கடைசி கட்ட நாடகம், கிண்டல், கேலி எல்லாம் உணர்வாளர்களை புண்படுத்தியுள்ளது. அதனால் தான் சீமானும் பாரதிராஜாவும் அ.தி.மு.கவுக்கு வாக்கு கேட்கும்படி தள்ளப்பட்டுவிட்டார்கள்.

கண்டிப்பாக இது பெரிய திருப்பத்தை தரும். மக்களது ஈழத்தமிழர்கள் மேலான இரக்கம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்தில், லோக்கல் பிரச்சினையோடு, ஈழப்பிரச்சினையையும் தவறாமல் தொடுகிறார். தனி ஈழம் என்று முழங்குகிறார்.

கலைஞர் இது பற்றி எதுவும் பேசாமல் இருந்தவர், இப்போது கடைசி நேரத்தில் அவரும் தனி ஈழம் என்கிறார். மக்களிடம் எந்த அளவு எடுபடும் என்று தெரியவில்லை.

எப்படி ஜெயலலிதாவின் கடைசி நேர , நானும் தரேன் இலவச டிவி, என்ற பிரச்சாரம் எடுபடாமல் போனதோ, அதே போல் இதுவும் எடுபடாது.

காங்கிரஸ் கட்சி, பெரிய ஆப்பு நெம்பர் 6

ஈழப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தினை இளைஞர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் முடிந்தவரை மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டுள்ளார்கள்..

ரவுடி கார்த்திக் சிதம்பரம், சிவகங்கையில் தடி எடுத்து ஆடுகிறார். இளைஞர்களை கைது செய்து தன்னுடைய பவரை காட்டியுள்ளார். எனக்கென்னமோ எதுவும் எடுபடாது என்று தோன்றுகிறது.

பெரியாரை வைத்து கேவல கமெண்ட் அடித்த இளங்கோவனை, அவரது தாயே மதிப்பதில்லை. இந்தமுறை சென்வாட் வரி ரத்து செய்த சாதனையை மீறி, ஆப்பு வாங்கப்போவது உறுதி.

தங்கபாலுவை பற்றியோ, மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை பற்றி ஒன்னும் சொல்வதற்கில்லை.

மனிதநேய மக்கள் கட்சி, ஆப்பு நெம்பர் 7

பொதுவாக இஸ்லாமிய பெருமக்கள், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு வாக்களிப்பார்கள். பாபர் மசூதி கட்ட செங்கல் அனுப்பிய அதிமுகவுக்கோ, வேறு கூட்டணிக்கோ வாக்களிக்கமாட்டார்கள்.

இந்தமுறை ம.ம.கவை உருவாக்கினார்கள். லட்சக்கணக்கானோர் தாம்பரத்தில் கூடினார்கள். திமுக கூட்டணியில் இரண்டு சீட்டுகளை கேட்டார்கள்.

ஆனால் ஒன்னுதான், வேண்டுமானால் அண்டார்ட்டிகாவிலோ, இதயத்திலோ நிறைய இடம் தருகிறேன் என்றார் கலைஞர்.

போய்யா நீயும் உன் சீட்டும் என்று சுயமரியாதையோடு தனியாக நிற்கிறார்கள். சில காண்ப்ளிக்ட்ஸ் இருந்தாலும், சென்னையில் முகமது அலி ஜின்னா, மற்றும் வேலூரில் காதர் மொய்தீன், பெரும்பாலும் ஜமாத்தில் பேசி, ம.ம.கவுக்கே வாக்களிப்பார்கள்.

இது ஒரு அமைதி புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். இதுவே காங்கிரசுக்கு ஒரு மாபெரும் ஆப்பு.

விஜயகாந்த், ஆப்பு நெம்பர் 8

அரசியல் அனாதைகளின் கட்சியாக ஆரம்பத்தில் என்னுடைய கண்ணுக்கு தெரிந்த தேமுதிக இப்போது சொல்லிக்கொள்ளும்படி வளர்ந்துள்ளது. சென்ற தேர்தலில் அதிமுகவின் ஆட்சிக்கனவை தகர்த்தது தேமுதிக தான் என்று உறுதியாக சொல்வேன்.

அரசியல் அபிலாஷையுள்ள பல இளைஞர்களுக்கு தெரியும், திமுக, அதிமுகவில் கடுகளவு கூட நுழைய இடமில்லை, அதனால் தேமுதிக அவர்களுக்கு ஆபத்பாந்தவன். விஜயகாந்த் மன்றத்தில் இல்லாதவர்களுக்கு கூட பதவி. அமவுண்ட் தட்டினால் போதும்..ஏதோ ஒரு இணை கிளை செயலாளர் பதவி...எதாவது கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைத்துக்கொள்ளலாம்...

எங்கள் ஏரியாவில் கொஞ்சம் கோந்துள்ள ஒரு அம்மணி, சென்னை சென்று, மச்சானிடம் ஒரு எல் தட்டி கிளை செயலாளரோ, துணை செயலாளரோ / பதவி வாங்கி வந்தது. அதற்கு முன் விஜயகாந்த் கே டிவியில் மட்டுமே அவருக்கு பரிச்சயம். ரஞ்சிதாவுடன் ஏதோ ஒரு படத்தில் காஷ்மீர் சென்று தீவிர வாதிகளை வேட்டையாடுவார். முட்டிக்கால் அளவு தண்ணீர் உள்ள டண்ணல்லில் இந்தியும் தமிழும் கலந்து பேசும் காஷ்மீர் தீவிரவாதிகளை சொழட்டி சொழட்டி அடிப்பார். அந்த அளவில் தான் அவருக்கு விஜயகாந்தை தெரியும்..ஆனால் இன்றைக்கு வட்டம், மாவட்டம், என்று பேசிக்கொண்டு, தன்னுடைய அரசியல் கரியரை ஸ்டார்ட் செய்துவிட்டது அந்த அம்மா..

இந்த புதிய பட்டாளம், தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள பம்பரமாக சுழன்றுகொண்டிருக்கிறது...அதனால் இந்த முறை தேமுதிகவின் ஆப்பு திமுகவின் பக்கம் என்று உறுதியாக சொல்லமுடியும். பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பெறும் என்று எல்.கே.சுதீஷ் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். சில கடும் போட்டி தொகுதிகளில் கனியை பறித்து நாடாளுமன்றத்திலும் நுழைந்து முரசு அறைய வாய்ப்பு உண்டு.

பாஜக,சரத் குமார், கிருஷ்ணசாமி, ஆப்பு நெம்பர் 9

மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் மற்ற கட்சிகளை மூன்றாம் இடத்துக்கு தள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. திருநாவுக்கரசர் எதாவது கடைசி நேர மேஜிக் கூட செய்யலாம்.ஈரேட்டுப்பக்கம், கோயம்புத்தூர்ப்பக்கம் கொங்கு பேரவை கொஞ்சம் நொங்கு எடுக்கலாம்..

இது தவிர கார்த்திக், டி.ஆர், மன்சூர் போன்றவர்களும் என்னுடைய எண்ணத்தில் படத்தான் செய்கிறார்கள்...கார்த்திக் தேவர் சாதி வாக்குகளை கொஞ்சம் அள்ளி வை.கோவுக்கு தொல்லை தர வாய்ப்புண்டு. எல்லாம் இந்த தொகுதி சீரமைப்பினால் வந்த கொடுமை...

டி.ஆரையும் மன்சூரையும் பற்றி எதாவது எழுதி உங்களுக்கு வயிற்று வலிதர இப்போதைக்கு எனக்கு விருப்பமில்லை...நான் சீரியசாக உள்ளேன்...எந்த ஆஸ்பிட்டலில் என்று கேட்கவேண்டாம்..

இதுதவிர நிறைவேற்ற முடியாமல்போன இரண்டு ஏக்கர் நிலம் மேட்டர், விஜயகாந்திடமிருந்து "காப்பி அடித்த" 50 ரூபாய் ரேஷன் பொருள் மேட்டர், கிலோ இரண்டு ரூபாய் அரிசி, எல்லாம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாயாதபடிக்கு, ஜெயலலிதாவின் ஊர் ஊர் ஹெலிகாப்டர் பிரச்சாரம் அமுக்கியுள்ளது...

அம்மாவுக்கு ராசி எண் ஒன்பது...அதனால் ஒன்பது ஆப்புகளுடன் முடித்துகொள்கிறேன்...ஸ்பெக்ட்ரம் விவகாரம் எல்லாம் பாமர மக்களுக்கு புரியவே அரை நாள் ஆகிவிடும். இதில் எங்க விளக்கறது ?




குறைந்தபட்சம் மேடைக்கு மேடை, தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று முழங்கியதற்காகவே, நான் அம்மாவுக்கு ஓட்டு போடுவேன்..சரத்பாபுவுக்கோ அல்லது 490 என்றோ போட்டு என்னுடைய வாக்கை வீணாக்கமாட்டேன்..

பதிவின் தலைப்பை படித்து, ஏன் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீட்டி முழக்கியிருந்திருப்பேன் என்று நினைத்தால் "நீங்கள் ஏமாந்தீர்கள், மே 13 FOOL". "ஏமாந்தியா, ஏப்ரல் FOOL" என்று சின்ன வயதில் விளையாடியது நியாபகம் வருகிறது...இருந்தாலும் காசை வாங்கிக்கொண்டு வாக்கை போட்டுவிட்டு, அந்த காசு தீரும் வரை சரக்கை போட்டுவிட்டு, அதன் பிறகு பள்ளம் விழுந்த சாலைகளில் பயணித்து, மின்சாரம் இல்லாததால் நிறுத்தப்பட்ட தொழிற்சாலையில் போய் சம்பள பாக்கியை கேட்டுவிட்டு, மீண்டும் அடுத்த தேர்தலுக்கோ, இடைத்தேர்தலுக்கோ காத்திருக்கும் நமது மக்களை FOOL என்றோ முட்டாள் என்றோ மரியாதையாக அழைக்கலாம் தப்பில்லை...

டிஸ்கி > இந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து. மாற்றம் வலைப்பதிவின் மற்ற உறுப்பினர்களுக்கு சம்பந்தம் இல்லாதது. மாற்றம் உறுப்பினர்கள் மற்றும் வலைப்பதிவர்கள், வாசகர்கள், பின்னூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் வாருங்கள்...

எதன் அடிப்படையில் அரசியல் மாற்றம்?

மாற்றம், மாற்றம் என்று முழங்குகிறோமே, ”அது ஒரு கட்சி ஆளுவதற்கு மாறாய், இன்னொரு கட்சி ஆள வகை செய்யும் ஆட்சி மாற்றத்தைச் சொல்லவில்லை” என்றே நான் எண்ணிக் கொள்கிறேன். நம்மில் பலருக்கும் ”இப்பொழுது, இந்தக் கட்சி பிடிக்கவில்லை, இன்னொரு கட்சி பிடிக்கிறது, இது தான் வெல்லும் குதிரை, இது தோற்றோடும் கழுதை” என்று பொருள் கொள்ளவும் கூடாது. மாறாக, ”இனி வருங்காலத்தில் நாட்டு மக்களின் வாழ்வுநிலை செழிக்க, உருப்படியான பொருளியல் வளர்ச்சி நம் குமுகாயத்தில் ஏற்பட, காலங் காலமாய்த் தொடர்ந்து வந்த தமிழின மரபுகள் காப்பாற்றப் பட, தமிழன் என்ற இனம் எதிர்காலத்தில் கரைந்து, சிதைந்து, அழிந்து விடாது நிற்க, தமிழரிடையே ஓர் அடிப்படை அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்ற விழைவில், ”பட்டதெலாம் போதும், படமுடியாது இனித் துயரம்” என்ற முனைப்பில், நமக்குள்ளே எழுந்த ஓர் எழுச்சியாக, இந்த முழக்கத்தைப் புரிந்து கொள்ளுகிறேன்.

இனிக் கட்டுரைக்கு வருவோம்.

இரண்டாம் உலகப்போர் சற்றேறக்குறைய முடிவுற்ற நிலையில், 1940களின் பின்னைந்து ஆண்டுகளில் இரண்டு பெரிய கேள்விகள் இந்தியத் துணைக்கண்டத்தில் பூதகரமாய் எழுந்து நின்றன. முதற் கேள்வி இந்திய விடுதலை பற்றியது. விடுதலை எப்போது கிடைக்கும்? [இந்தக் கேள்வியின் அடிப்படை, இந்தியாவின் வளங்களும், செல்வமும், உழைப்பும், பிரித்தானிய முற்றாளுமைக்குப் பயன்படாமல், இந்திய மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற வேட்கையில் இருந்தது.] 1947 ஆகஸ்டு 15 இல் விடை கிடைத்தபின், இந்த கேள்வி மக்கள் மனத்தை விட்டு நீங்கத் தொடங்கியது. 1950 சனவரி 26 இல் ”நாமே இந்நாட்டு மன்னர்” என்று உறுதி செய்த நிலையில், பிரித்தானிய அரசின் ஆளுமை அடியோடு அறுக்கப் பட்ட நிலையில், இந்தக் கேள்விக்கு வேலையில்லாமற் போய், முற்றிலுமாய் அகன்றது.

ஆனால், இந்தியாவின் பல்தேசத் தன்மை பற்றிய இரண்டாவது கேள்வி நெடுநாட்கள் தங்கி இந்தியரிடையே ஊறிக் கிடந்தது. நாடு விடுதலை பெற்றபோது, ”இந்தியா என்பது பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் ஓர் இடமாகப்” புரியப்பட்டு, 1969க்குப் பின், இந்திரா காந்தி காலத்தில், தலைகீழாய், அரசியற் பொருளியல் கொள்கைகள் மாறி, இன்று எதிர்மறையாக, ஓர் ஒற்றைத் தேசநாடாக, கட்டி அமைக்கப்படும் நிலைக்கு வந்திருப்பதால், இந்தக் கேள்வி முகன்மை பெறுகிறது. [இந்தியா என்ற அரசியல் கருத்தீடு 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் துணைக்கண்டத்தில் இருந்ததில்லை.]

1947 அளவில் இங்கிருந்த பல கட்சிகளும், இயக்கங்களும் [அதில் பேராயமும், சமவுடைமைக் (socialistic) கட்சிகளும், பொதுவுடைமைக் கட்சியும் முகன்மையானவை], ”பல்தேசம்” என்ற உள்ளமை (= reality) நிலையை உணர்ந்தே இருந்ததால், பல்தேசத் தன்மையைக் கவனமாகவே காப்பாற்றின. பேராயக் கட்சியின் ஆவடி மாநாடு கூட அதை ஆழ்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இத்தகைய கவனத்தின் காரணமாக, இந்த நாட்டின் பெயரைக்கூட ”இந்திய ஒன்றியம்” என்றே அன்றைய அரசியலார் சொல்லிவந்தனர். [1969 ற்கு அப்புறம் நெருக்கடி நிலை உருவான பின் தான், இந்தியரின் புகற்கடவுப் (passport) பொத்தகங்களில் “இந்தியக் குடியரசு (Republic of India)” என்று பெயர் பொறிக்கும் நிலை வந்தது. ஒன்றியம் என்ற கருத்தீடு ஓடியே போயிற்று.]

தொடக்கத்தில் ”இந்திய ஒன்றியம்” என்ற புரிதலின் விளைவாக, 1954 இல் ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலுவின் போராட்டத்திற்கு அப்புறம் உருவான ”மொழிவாரி மாநிலங்கள்” கொள்கையைப் பேராயக் கட்சியும் ஒப்புக் கொண்டது. [இன்றோ, அதிகார வர்க்கத்தில் இருக்கும் பலரும் ”மொழிவாரி மாநிலங்கள்” என்று அன்றைய அரசு ஏற்படுத்தியதே தவறு என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அதை இந்தியாவின் தரகு முதலாளியமும் (comprador capitalism) ஏற்றுக் கொள்கிறது.] "வலுவான மாநில அரசுகள் சேர்ந்தே வலுவான நடுவரசு ஏற்படமுடியும்" என்ற அடிப்படை ஆழுணர்வு மாறி, ”வலுவான நடுவரசு, வலுவற்ற மாநிலங்கள்” என்பதே இன்றையக் கட்டுமானத்தின் அடிப்படையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் தில்லிக்காரனைத் தேடி ஓடும் நாய்ப்பிழைப்பு அதனால் ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய நிலையில் நாட்டின் விளிம்பெங்கணும் (குறிப்பாக, கடல் மற்றும் நில எல்லைகளில்) எல்லாம், வரையறுத்துச் சொல்லத் தக்க தேசிய இனங்கள் ஏற்பட்டிருந்தன. நாட்டின் உட்புறத்தில் மட்டும் இந்தி மொழி பேசும் ஒரு தேசிய இனம் உருவாகாத நிலையில் இருந்தது. நாட்டு விடுதலைக்கு அப்புறம், பொருளியல் வளர்ச்சி ஏற்பட, ஏற்பட, இந்தி பேசும் தேசிய இனம் ஒன்று உருவாகும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். இப்படிச் சொல்லும் போது, ”தேசிய இனங்களுக்கு இடையே முரண்பாடுகள் உண்டு, அந்த முரண்பாடுகள். இந்தியாவின் வளங்கள் மேம்பாடாகாத சூழ்நிலையில், பெரிதாகிப் பின்னால் அந்த வளங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் போது, தேசிய இனங்களின் இடையே பங்குச் சிக்கல் வரத்தான் செய்யும்” என்று ஆய்ந்தோர் அறிந்திருந்தார்கள். அதே பொழுது, ”இந்த முரண்பாடுகளைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள, இந்தியக் குடியரசுச் சட்ட அமைப்பு இடங் கொடுக்கும், பங்குச் சிக்கல்களைப் பேசித் தீர்க்க முடியும்” என்றே அவர்கள் எண்ணினார்கள்.

ஆனால், விடுதலை இந்தியாவில் இருந்த இரண்டுவகை முதலாளிகளில் இந்திய நாட்டு நலனில் அக்கறை கொண்ட தேசிய முதலாளிகள் வளருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புப் பொய்த்துப் போய், தரகு முதலாளிகளே வளர்ந்து, இன்றைக்கு ஒற்றை இந்தியா என்ற கட்டுமானம் மிகப் பெரிதாக ஆகிப் போனது. தரகு முதலாளிகளின் முகவரான (agent) இந்திய தேசியப் பேராயக் கட்சி இன்றைக்கு ஒற்றை இந்தியாவையே முன்வைக்கிறது. அதன் விளைவாக, நாட்டில் அரசுக்கு வரும் வருமானங்கள் [வரி (tax), சுங்கம் (customs duty), உல்கு (excise duty - இதைக் கலால் வரி என்றே நாளிதழ்கள் சொல்லிவருகின்றன)] என எல்லாமே நடுவரசில் குவிந்து, மாநில அரசுகள் பெறும் விற்பனை வரி ஆகக் குறைந்து போக, ஒவ்வோர் ஆண்டும் திட்டக் குழுவோடு நடக்கும் பங்குப்பிரிப்பில் ”ஐயா, சாமி, எங்களுக்கு இன்னுங் கொஞ்சம் பிச்சை போடுங்கள், நாலு மாதமாய்ச் சரியாச் சாப்பிடலை சாமி” என்று ஏந்திப் பிழைக்கும் நிலையே நடந்து வருகிறது. எந்த தமிழ்நாட்டு முதலமைச்சரும் இந்தப் பங்குப்பிரிப்புக் கூட்டத்திற்குப் போகாமல் இருக்க மாட்டார். [வேறு எத்தனையோ கூட்டங்களுக்குப் போகாமல் இருப்பவர்கள், இதை மட்டும் தவிர்க்கவே மாட்டார்கள். இதில் ஐயாவும், அம்மாவும் ஒன்று போலத்தான்.] “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று இவர்கள் போடும் கூச்சல்கள் எல்லாம் வெற்று முழக்கங்கள். ”பிச்சை போடும் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பிச்சை போடுகிறார்கள்” என்பதில் தான், இவர்களின் அந்தந்த ஆண்டு நடைமுறையே இருக்கிறது. “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது கூட” அந்தக் கூட்டத்தின் வழியே தான் முடிவு செய்யப் படுகிறது.

ஆக, நடுவரசை நத்திப் பிழைக்கும் பிழைப்புத்தான் இன்றைய இந்தியாவில் என்றென்றும் மாநில அரசிற்கு வாய்த்திருக்கிறது. எனவே எந்த மாநில அரசுக் கட்சியும் நடுவரசை எதிர்த்துக் கொள்ளாது. நலத்திட்டங்களில் நக்கிப் பிழைக்க வேண்டுமானால், நடுவரசுக் கட்சியின் சொற்படிதான் கேட்க வேண்டும். தனிப்படச் சொந்தமாக ஒரு கொள்கை வைத்து, அரசியல் பொருளியற் புலங்களில் இவர்கள் செயற்படவே முடியாது. கிட்டத்தட்ட, ஊராட்சி மன்றங்களை தமிழ்நாடு அரசு எப்படி நடத்தி வைத்திருக்கிறதோ, அதே நிலையில் தான் மாநில அரசை, நடுவரசும் நடத்துகிறது. மாநில அரசுகளுக்கு அதிகாரம், உரிமை கிடைத்திருக்கிறது என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் பம்மாத்து என்றே சொல்லவேண்டும்.

இது தான் உள்ளமை (reality) நிலை. மாற்றம் வேண்டுமானால் இதில் மாற்றம் வேண்டும். ஒரு மாநிலத்தின் செலவு நடைக்குத் தகுந்தாற்போல, அதன் வரவும் அங்கேயே அதற்குக் கிடைக்க வேண்டும். மாநிலச் செலவு 100 உருவாய் என்றால் உள்ளூர் வரவு 20 உருவாயாய் இருந்து, மீதியை நடுவண் அரசிடம் இருந்து ஏந்திப் பெறவேண்டுமானால், அப்புறம் தமிழினம், தமிழரசு என்று பேசுவதில் பொருளில்லை. நான், மாநில அரசின் வருவாய், அதன் செலவிற்குத் தக்க 100க்கு 100 இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு 80%, 90% ஆவது இருக்க வேண்டாமா? - என்றே சொல்லுகிறேன். அதே போது, நடுவரசிற்கும், மாநில அரசிற்கும் இடையே நீக்குப் போக்கு இருக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளுகிறேன். இப்போதிருக்கும் ஆட்சியமைப்பில் மாநில அரசு என்பது நடுவரசின் தொங்குசதையாகவே இருக்கமுடியும் என்று 30, 40 ஆண்டுகளாய் உணர்ந்து வருகிறோம். மொத்தத்தில் ”தமிழ்நாடு ஊராட்சி மன்றம்” என்று வேண்டுமானால், பெருமைப் பட்டுக் கொள்ளலாம். இதில் மாற்றம் கொண்டு வந்து, பங்கீட்டுச் சிக்கலையும் எளிதில் தீர்க்க முடிந்தால், மாநில அரசின் வருவாயைக் கொண்டு ஒரு சீரான வளர்ச்சியை நாடெங்கிலும் ஏற்படுத்தி, பல்தேசிய இந்தியா என்ற கருத்தை இங்கே வளர்க்க முடியும்.”பல்தேசிய இந்தியா” என்ற கருத்து வலுப்பெற்று, 4, 5 வலுவான மாநிலங்கள் ஏற்பட்டு, நடுவரசை ஒருமுறை அசைத்துக் காண்பித்தால், இது உறுதியாய் மாறும். அதே பொழுது இது கடினமான வேலை; என்றாலும், மக்களாட்சி வழிமுறைகளால் இதைச் செய்யமுடியும்

இதே நிலை தான் ஆற்று நீர் வளங்களைப் பெறுவதிலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலும் இருக்கிறது. காவிரி ஆற்று நீரைப் பங்கு போட்டுக் கொள்ளுவதில் உச்ச நயன்மை மன்றம் ஒரு தீர்ப்புச் சொல்லுகிறது. அதைச் செயற்படுத்துவதற்கு ஒரு நடுவாளராகக் (referee) கூட நடுவரசு இருக்க மாட்டேன் என்கிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று ஆகிப் போனது. மாநில அரசு வலுவற்றதாக இருந்தால், அப்புறம் என்ன சுய ஆட்சி?

ஈழச்சிக்கலில் இன்று ஏற்பட்டிருக்கும் நிலைப்பாடும் இந்த”ஒற்றை இந்தியா” என்ற கொள்கையின் விளைவே. இந்தியத் தரகு முதலாளியத்திற்குத் தமிழீழம் என்பது ஏற்படக் கூடாது. ஊழல் மலிந்த சிங்களப் பேரினவாத அரசு அதற்கு அடிமையாகப் பணி செய்யும் என்று எண்ணிக் கொள்வதால், ஒரு தீவில் இரண்டு நாடுகள் ஏற்படுவதை இந்தியத் தரகு முதலாளியமும், அதற்கு வழி செய்யும் பேராயமும், பாரதிய சனதாவும் வரவேற்கவில்லை. ஒருவேளை சீனரின் ஆதிக்கம் அங்கு கூடி, அது இந்தியத் தரகு முதலாளியத்திற்கு ஊறு விளைவிப்பதாய் ஆகும் என்றால் தமிழீழம் ஏற்படுவதை இந்திய நடுவரசு ஓர்ந்து பார்க்கக் கூடும். அந்தச் சூழ்நிலை நெருக்கி அமையும் வரை, தமிழினத்திற்கு எதிராகத்தான் இந்திய நடுவரசு [அது பேராயம், பாரதிய சனதா ஆகியவற்றில் எந்தக் கட்சி முன்னிருந்தாலும்] வேலை செய்யும். தி.மு.க. மாநில அரசு தான் நிலைத்து நிற்கப் பேராயத்தை அண்ட வேண்டியிருக்கிற நிலையில், ஒற்றை இந்தியாவின் கருத்தை அதனால் மீற முடியாது. அ,தி.மு.க இந்தத் தேர்தலில் வென்றாலும், நிலைமை மாறுமா என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. பொதுவாக, தி,மு.க, அல்லது. அ.தி.மு.க. அரசுகள் தமிழீழம் ஏற்பட வகை செய்ய மாட்டா என்பது தான் என் புரிதல்.

ஒற்றை இந்தியா என்ற கருத்தாக்கமும் பல்தேச இந்தியா என்ற கருத்தாக்கமும் ஒன்றிற்கொன்று முரணானவை. [பல்தேசம் என்ற கருத்து இந்தியாவில் இன்று மிகவும் குறைந்து போனதால் தான், ஈழச் சிக்கலில் தமிழ்நாட்டுத் தமிழரின் வேண்டுகோள் குப்பையில் போடப் படுகிறது.] இன்றையப் பேராயக் கட்சி ஒற்றை இந்தியா என்ற கருத்தீட்டில் ஊன்றிப் போனது. பாரதீய சனதாக் கட்சியும் அப்படியே தான் சொல்லுகிறது. (அதனால் தான் தரகு முதலாளியம் பாரதிய சனதாவையும் ஏற்றுக் கொள்ளுகிறது.) [ஒற்றை இந்தியா என்பது தான் நம் கருத்து என்றால், அப்புறம் பேராயம் அல்லது பா.ச.க. ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போய்க் கொண்டே இருக்கலாம்.]

பல்தேச இந்தியா என்ற கருத்தீட்டைத் தூக்கிப் பிடித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியர்) கூட நடைமுறையில் ஒற்றை இந்தியாவைத்தான் இன்று செயற்படுத்தி வருகிறது. இருக்கும் பெரும்பாலான பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் கொள்கைகளில் நீர்த்துப் போனவை என்பதால் தான் அவற்றைப் பற்றிப் பேசிப் பலனில்லை. திராவிடநாட்டுக் கொள்கையைக் கைவிட்டபின்பு ”பல்தேச இந்தியா” என்ற கொள்கையைத் தான் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற பெயரில் தி.மு.க. சொல்லி வந்தது. அ.தி.மு.க.விற்கும் கிட்டத்தட்ட இதே கொள்கை தான். ஆனாலும் நடுவண் அரசில் பங்குபெற்றுச் சுவை கண்ட இந்த இரு கட்சிகளும் ”சுய ஆட்சி” என்ற கருத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போகச் செய்து விட்டன. [கொள்கையில் இவைகள் சப்பாணிகளாய் இருப்பது ஒரு பக்கம், இவைகள் செய்யும் ஊழலால், இவைகளின் குடுமிகள் நடுவரசுக் கட்சிகளின் கையில் சிக்கிக் கொள்வது இன்னொரு பக்கம். இந்த இருவேறு காரணங்களால், இவர்களை நடுவரசுக் கட்சி விடாது மிரட்டிக் கொண்டே இருக்கும்.] முதுகெலும்பு இழந்த இந்தக் கட்சிகள் இனிமேல் எழுந்துவந்து சுய ஆட்சியைத் தூக்கிப் பிடிக்கும் என்பதெல்லாம் பகற்கனவே. [வெறுமே வாக்களிப்பிற்கு மட்டுமே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாநில சுயாட்சி பற்றிப் பேசுகின்றன.] பல்தேச இந்தியா என்ற கொள்கை இல்லை என்றால், ”தமிழர் என்ற அடையாளம் மறைந்தே போகும், இந்தியன் என்ற அடையாளமே மிஞ்சும்” என்பதே என் புரிதல்.

இந்திரா காலத்தில் இருந்த சனதாக் கட்சி (பாரதிய சனதா அல்ல; செயப்பிரகாசு நாராயணன் வழி வந்த சனதா), சனதாவின் பின்வந்த சிறுசிறு கட்சிகள் (யாதவ்கள், கௌடா போன்றவர்களின் கட்சிகள்), என மற்ற கட்சிகளும் கொள்கையளவில் இன்றும் பல்தேச இந்தியா என்றுதான் சொல்லுகின்றன. ஆனால் நடைமுறையில் பேராயக் கட்சியைச் சார்ந்திருப்பதால், இவற்றின் குரல்கள் எடுபடுவதே இல்லை. அதனால் இவையும் ”லோகியா சமவுடைமைக்” கொள்கையில் இருந்து நீர்த்துப் போயின என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது, கொள்கையளவில், ”பல்தேச இந்தியா” என்பதற்கு எதிராகச் செயற்பட்டு, “ஒற்றை இந்தியா” என்ற கொள்கையை நிலைநாட்டிவரும் பேராயக் கட்சியும், “பல்தேச இந்தியா” என்ற தம் கொள்கையை நீர்த்துப் போகச் செய்து, பேராயத்திற்கு அடியாளாக வேலை செய்து கொண்டிருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் ஒதுக்கத்தான் வேண்டும் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த மாற்றத்தை அடைய நெடுங்காலம் ஆகும்.

நீண்ட கால நோக்கில் எந்தெந்தக் கட்சிகள் “பல்தேச இந்தியா” என்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்றனவோ, அவற்றையே நாம் ஆதரிக்க இயலும். [ஆனால், இன்றைக்கு இருக்கும் நிலையில், ஓர் இடைக்கால முன்னெடுப்பைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான காரணங்களை நான் விளக்க வேண்டியதில்லை. தேர்தற் களத்தில் இருக்கும் பலருக்கும் அது புரிந்தே இருக்கிறது. அதனால், ”தற்போதைக்குப் பேராயக் கட்சி தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறக் கூடாது, கூடவே தி.மு.க.வுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட வேண்டும்” என்ற பெரும்பாலான மக்களின் விழைவு நடக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அதன் பலனாய், அ.தி.மு.க வெற்றி பெற்று, அதனால் ஏற்படும் விளைவுகளைப் பின்னால் வேறு போராட்டங்களினால் எதிர்கொள்ளத் தான் வேண்டும். ”இப்பொழுது தயங்கிக் கொண்டே இருந்து, பேராயக் கட்சியையும், தி.மு.க.வையும் வெற்றி பெற வைப்பது சரியான செயல்முறை அல்ல” என்றும் நான் நினைக்கிறேன்.]